Friday, January 22, 2010

மனிதாபிமானம் – சிறுகதை

manithapi

ம்மே குத்துக்கல்லாட்டம் உக்காந்து கிடக்காம ஆக வேண்டியதைப் பாருங்க. ரோசாமணியைப் பெண் பார்க்க வாராக. இன்னும் மணி நேரம் கூட இல்லை”.

“எலே என் செல்ல ராசா, நெசம்மாவா சொல்றே?”  

நெசம்மாத்தான் பாட்டி. எங்க சின்ன முதலாளிதான் வெவரம் சொன்னாரு. மாப்பிள்ளைக்கு ரோசாமணியை விட பெரிய படிப்பாம். சென்னையில் ஒரு பெரிய மருந்துக் கம்பெனியில் வேலையாம்.  நல்ல சம்பளம். கவுரவமான குடும்பம்னு சொன்னாரு”. 

“தங்கச்சிக்கு சீர் செனத்தியெல்லாம் பேசியாச்சா ஆறுமுகம்”. தாயின் குரலில் கவலை. 

“நம்ம குடும்பத்தை பத்தி முதலாளி வெவரமா சொல்லிட்டாராம். அவங்களுக்கு படிச்ச பொண்ணா குடும்ப லட்சணமா இருந்தாப் போதுமாம். நம்மால முடிஞ்சத செய்யச் சொல்லிட்டாக. சம்மதிச்சுப்புட்டுத்தான் வாராக”  

“ராசா என் வயித்துல பால வார்த்த. அந்த நீலியம்மன் இன்னைக்காவது கண்ணைத் திறந்தாளே! அப்படியே உனக்கும் ஒன்னப் பார்த்துட்டா ஒரு செலவா போகும்”.

“பாட்டி நீ வாய மூடி சும்மா இருக்க மாட்டே? கல்யாணாச் செலவு அவங்கது. நீ ஓசில ஒல வைக்கப் பார்க்கியா? போங்க. போயி முதல்ல ஆக வேண்டியதைப் பாருங்க”.  

”சரி ஆறுமுகம்! ரோசாமணிக்கு சேதி சொல்லியாச்சா?”

“மதியமே அவ ஸ்கூலுக்குப் போயி சேதிய சொல்லிட்டேன். வந்திருவா”.

நம் நாட்டின் பட்ஜெட் பற்றிக் கவலைப்படாத குடும்பங்களில் ஆறுமுகசாமி குடும்பமும் ஒன்று. இரண்டு பேர் உழைத்தும் பற்றாக்குறை நிலவரம்!

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை அதுவும் நல்ல நிலையில் இருந்த குடும்பம்தான். அவன் தந்தைக்கு இதய நோய் என்ற வடிவில் துரதிருஷ்டம் அக்குடும்பத்தை தொற்றிக் கொள்ள, அது அக்குடும்பத்தின் சொத்துக்களையும் விழுங்கி, ரோசாமணிக்கு என்று இருந்த சேமிப்பையும் சேர்த்து ஏப்பம் விட்டு விட்டது.

ரோசாமணி ஒரு பட்டதாரி ஆசிரியை. படிப்பைப் பொறுத்த வரை அவள்தான் அந்த ஊருக்கு கின்னஸ் ரேகார்டு. பெயருக்கு ஏற்றாற்போல் அவள் உணமையிலேயே  அழகு ரோசாதான்.  அக்கிராமத்து சொந்தங்களில் ரோசாமணியை மணந்து கொள்ள பலருக்கு கொள்ளைப் பிரியம். அடைந்தால் ரோசாமணிதான் என்று சிலர் வரிந்துகட்டிக் கொண்டிருக்க, அவள் தந்தையோ படிப்பை அளவு கோலாக வைத்து, வெளியில் மாப்பிள்ளை பேசி முடித்து விட்டார். அவள் பருவம் இசைத்த ராகத்திற்கு மயங்க்கிக் கிடந்த சொந்தங்கள் அதிர்ந்து போனார்கள். ஏமாற்றம் பொறாமையாய் வளர்ந்து குரோதத்தில் முடிந்தது. 

ரோசாமணி குடும்பதின் நிலை தலைகீழானதும் அவள் தந்தை பேசி முடித்திருந்த மாப்பிள்ளை வீட்டார் நழுவிக் கொண்டனர். திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கையில் மருத்துவமனையில் இருந்த அவருக்கு விவரம் எப்படியோ கசிந்து விட, செயற்கை சுவசத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அவர் உயிர் அதிர்ச்சியில் விடை பெற்றுக்கொண்டது.

அவள் தந்தையின் மறைவுக்குப் பிறகும் எத்தனையோ சம்மந்தங்கள் வரத்தான் செய்தன .சிலர் கொண்டு வந்த வரதட்சணை அளவு கோல் ரோசாமணியின் குடும்ப சக்திக்கு எட்டவில்லை. வரதட்சணையை வற்புறுத்தாதவர்களிடம் அவள் சொந்தங்கள் இல்லாதையும், பொல்லாததையும் சொல்லி கலைத்து விடுவதில் குறியாயிருந்தனர்.

எப்படியோ ரோசாமணியின் தந்தையிடமே “ஆண்பிள்ளையிருக்க பெண்ணைப் படிக்க வைப்பானேன்” என்று சவடால் விட்டவர்களுக்கு அக்குடும்பம் மூன்றாண்டு காலம் தீனி போட வேண்டியதாயிற்று. இத்தனை காலம் மௌனத்தில் ஊர்ந்த அவ்வீட்டின் வாயிலை இப்போதுதான் இன்ப கணங்கள் எட்டிப் பார்க்கின்றன. வீடு தடபுடல் ஆக்கிக் கொண்டிருந்தது.  

அந்தத் தனியார் பள்ளியில் பணி முடிந்து ரோசாமணி வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் பயணம் செய்த பேருந்து, ரயில்வே கேட்ட் திறப்பதற்காக காத்திருக்க, தாமிரபரணிக் கரையின் துடிப்பை அவள் கண்கள் அளந்துகொண்டிருந்தன. 

செந்நெல் வயலில் தென்றால் தவழ, இளம் பயிர்களில் அலைகள் தோன்ற அந்த இதமான காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.   

ரயிவே கேட் திறந்தது, இறக்கைகள் முளைத்து விட்டது போல் வாகனங்கள் பறந்தன. என்னதான் இயற்கைக் காட்சிகளும், தோழிகளின் பேச்சுகளும் அவள் மனதை அமைதிப் படுத்த முயன்றாலும், ஊர் நெருங்க நெருங்க அலைபாயும் அவள் மனதில் இன்னும் ஆறதா ரணம் சிந்தும் நிகழ்வுகள் பீரிட்டுக் கிளம்பின. 

“புதுக்குளம் இறங்குங்க.” கண்டக்டர் குரலில் உயிர் பெற்றாள். 

“ரோசாமணி என்ன கனவா? தூக்கத்தில் திருநெல்வேலி போயிடாதே...” சிரிப்பும் கும்மாளமுமாய் தோழிகள் இறங்க.... கனத்த மானதுடன் ரோசாமணி இறங்க்க்கினாள்.

நெடுஞ்சாலையிலிருந்து எதிரில் பிரியும் புதுக்குளம் விலக்கு கிளைச் சாலைக்கு வந்தனர்.

“ரோசாமணி விட்டுக்குப் போய்விட்டு கால்மணி நேரத்தில் உன் வீட்டுக்கு வந்து விடுவோம். அதுக்குள்ள மாப்பிள்ளையை அனுப்பிவிடமாட்டியே?”

“சீ போடி...”

“அட வெட்கத்தைப் பாரேன். எதற்கும் கொஞ்சம் மிச்சமிருக்கட்டும், மாப்பிள்ளைக்கு.

“ஏய் நீ சும்மாவே இருக்க மாட்டியா” அவள் பதில் சொன்னதும் தோழிகள் பிரியும் நேரம், அந்த சம்பவம் நடந்தே விட்டது. புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்த அவன் அவர்களை நோக்கி வந்தான். 

“அந்தப் பைத்தியம் வற்றான். எதுவும் வாங்கம போக்கமாட்டான். பர்ஸுகளைத் துளாவினார். ஆனால் அவனோ     

“ரோசாமணி நான் பழசெல்லாம் மன்னிச்சிடறேன். என்னைக் கட்டிக்கோயேன்.  இன்னிக்கு சினிமாக்கு போகலாம் வர்றியா?”

என்னடா சொன்னே...” ஓங்கிய அவள் கையைப் பிடித்து முத்தமிட முயன்றான். வெடுக்கெனப் பிடிங்கிக் கொண்டாள். 

“நீ என்ன அடிக்க வந்தே... உன் வண்டவாளத்தை ஊருக்குள்ளே போயி சொல்லிடு வேன். ஆமா...” அவள் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை.  பக்கத்திலிருந்த வாழைத் தோப்புக்குள் புகுந்து மறந்தான்.

ரோசாமணி வீடு களைகட்டியிருந்தது. உள்ளே அவளுக்கு அலங்காரம். அவமானத்தால் குன்றிப்போயிருந்த அவள் மனம் அடிக்கடி முகத்துக்கு வந்தது. என்னதான் மேக்-ஆஃப் போட்டாலும் முகம் வெளிறிக் கிடந்தது. அவளைக் கூடத்துக்கு அழைத்து வந்தனர்.

கூடத்தில் மாப்பிள்ளை விட்டார் உள்ளூர் வாசிகளுடன் கலகலப்பாய் வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அங்கு ரோசாமணி வந்ததுதான் தாமதம். நிலைமை தலைகீழாகி விட்டது. கலகலப்பு எங்கோ ஓடி ஓழிந்து கொண்டது.

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவு. உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். நல்லா யிருக்குடா கதை.  தேடிப் பிடிச்சிருக்க பாரு பொண்ண. மேயப்போறா மாட்டுக்கு கொம்புல புல்லுக் கட்டு கேட்குதாம். இன்னும் ஏண்டா இடிச்ச புளி மாதிரி உட்காந்திருக்கே...” ஏழுந்தாள்.

“அம்மா நீங்க என்ன சொல்றீங்க.” பதைபதைத்தான் ஆறுமுகம்.

“ம்... என்னை ஏன்யா கேட்கறே... அந்தக் கன்றவிய என் வயலா வேறே சொல்லனு மாக்கும்...” இந்தாதானே இருக்கா ஒன் தங்கச்சி... கேளேன் நடு ரோட்ல நடந்த கூத்த... நாங்க சீர்வரிசைதான் கட்டு செட்டா வேண்டாம்னு சொன்னொம். ஆனா மனம் ரோஷம் வேண்டாம்னு சொல்லல... உள்ளுர்ல வெல போகாத மாடு வெளியூர்லயா போகும்னு சொல்வாங்க. சும்மாவா சொன்னாங்க. ஏண்டா அருண் இன்னுமா உட்கார்ந்திருக்கே.”

உலகின் அத்தனை இடிகளும் அவன் தலையில் இறங்கியது போலானான் ஆறுமுகம். அவன் முதலாளியைப் பார்த்தான். “ஐயா நிங்களாவது ஒரு வார்த்த சொல்லுங்க... போக வேண்டாம்னு...” கூடத்தில் ஒரே கூச்சல்.

ரோசாமணியின் மனமோ குமுறிக் கொந்தளித்தது. உள்ளங்கைக்குள் முகத்தைப் புதைத்து மனதை அடக்கி விடப் பார்த்தாள். அவள் பொன்னுடல்தான் குலுங்கியது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவியாய்த் தவித்தாள். மலைப் பிரதேசங் களைத் தேடி மனதை அமைதிப்படுத்த முயன்றாள். அவைகள் எரிமலைகளாயின. துருவங்களின் பனிப்பொழிவை நாடிப் பார்த்தாள். அவைகள் சுட்டெரித்தன. வெண்ணிலாவில் அடைக்கலம் வேண்டிப் பார்த்தாள் அது பேச மறுத்து ஒளிந்து கொண்டது.

ஏ! மனிதாபிமானமே! உன் விலைதான் என்ன?  அவள் துன்பத்தின் கூர்முனை அதை யும் சீண்டிப் பார்த்தது... ம்.. தெரியும். என் உயிர்தானே. கொடுத்து விடுகிறேன் இனியும் என் அப்பாவி அண்ணன் வாழ்விற்கு ஒரு வினாடி கூட தடையாய் இருக்க மாட்டேன். பொங்கி ஓடும் தாமிரபரணியே! பொறு ஒரு நிமிடம்! இதோ வந்து விடுகிறேன். என் தந்தையிடம் என்னையும் சேர்ப்பித்துவிடு... எழுந்தாள்.

அருண்குமாரும் எழுந்தான். 

“அம்மெ நீ செத்த வய முடி சும்மா இருக்கியா” அவன் கணீர் குரல் சூழ்நிலையை அமைத்திக்குக் கொண்டு வந்தது. அவன் பார்வை ஆறுமுகசாமியின் குடும்பத்தார் மீது விழுந்தது. வாள் வீச்சென அந்த அமைதியைக் கூறுபோட்டன அவன் வாத்தைகள். “நீங்க எதையும் மனசில வைத்துக் கொள்ள வேண்டாம். எங்கம்மா பேசியதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இங்கு வரும் முன் புதுக்குளம் விலக்கில் இளநீர் சாப்பிட காரை நிறுத்தியிருந்தோம். ஒரு பஸ்ஸிலிருந்து நான்கைந்து பெண்கள் இறங்கி வந்தனர். அவர்களில் ஒருத்தியை ஒரு பைத்தியம் வம்புக்கிழுத்தான். அவள் மீது எந்தத் தவறும் இல்லை. நான் காரை விட்டு இறங்கி அவனைப் பிடிக்க நினைத்தேன். அதற்குள் அவன் ஓடிவிட்டான். உண்மை பேசுபவன் ஓடுவானா? உங்க முதலாளி வார்த்தைய நம்பித்தான் நான் இவ்வளவு தூரம் வந்ததே. அந்தப் பெண்தான் உன் தங்கை என்று எனக்கு அப்போது தெரியாது. உன் குடும்பத்துக்கு ஏற்படும் இன்னல்களை உன் முதலாளி சொன்ன போது அது இத்தனை தீவிரமாயிருக்கும் என்று நான் கனவிலும் கருதவில்லை. நல்லது நடக்க நாலுபேர் என்றால் அதைக் கெடுக்க பத்து பேர் இருப்பார்கள் போலும்.  எனக்கு உன் தங்கையை ரொம்ப பிடிச்சிருக்கு.”

மனிதாபிமானத்தை நேரில் பார்க்க ரோசாமணி தலையை நிமிர்த்தினாள். விழிநீர் மறைவில் அவனைப் பார்த்தாள். தன்னைச் சூழ்நிதிருப்பது வெறும் மூடுபனிதானா? விலகினால் தெரியுமா நட்சத்திரம்?

அவன் வார்த்தைகளில் நிலைமை இயல்புக்கு வர, அருண்குமார் பார்வை தாயிடம் திரும்பியது. “உங்களுக்கு வரவர என்ன பேசரதுனே தெரியலை. ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு பெண்ணே எதிரியா? என்னமா இது. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். மறந்து விட்டீர்களா? இத்னை பெரிய மனிதர்கள் இங்கே கூடியிருக்க, ஒரு பைத்தியம் ஏதோ உளறியதுதான் உனக்கு பெரிசா போச்சா? சென்ற வாரம் என்னை ஒரு பெண் நிராகரித்தாள். நீ என்னமாய்ப் புலம்பினே. அப்படித்தானே இவர்களும் துடித்திருப்பார்கள்... ஆமா ஆறுமுகம். அவன் பார்வை திரும்பியது.

“எனக்கு பிறவியிலேயே கால் சிறிது ஊனம். என் மனோபலத்தாலும் சிகிச்சையாலும் அது சரியாகி விட்டது. காலைக் காட்டினான். ஆனாலும் எனக்கு நிலைத்துவிட்ட பழைய பெயரை மாற்ற முடியவில்லை. இதையே காரணம் காட்டி எனக்கு பலர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நாளை உன் தங்கை என்னைத் தவறாக நினைக்கக் கூடாது பார். இப்பக் கேள், அவள் சம்மதத்தை. அவளுக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம்”.

ரோசாமணியின் உள்ளம் அவள் வாய்க்கு வரத் துடித்தது. ஆனால் வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை. கதிரவனின் ஆளுகைக்குக் கிழ் அவன்தான் மனிதனாகத் தெரிந்தான். பெருமிதத்தில் விளங்கிய அவள் மனதை முகம் பிரதிபலித்தது.

நான்கு கண்களின் ஊடுருவலில் இரு உள்ளங்கள் சங்கமித்தன. அங்கு சுறக்கும் இன்பத் தேனுக்கு ஈடிணை இல்லைதானே!

“ரோசாமணி”... குரல் வந்த திக்கில் அனைவர் பார்வையும் திரும்ப “இன்று மெயில் வந்தது தாமதம் என்றாலும் உனக்கு சரியான நேரத்தில்தான் வந்திருக்கு இந்தக் கடிதம்.

நிகழ்ச்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் என்றுதான் எடுத்து வந்தேன்.  இது ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து வந்தாலும் என்னைப் பொறுத்த வரை இது உன் தந்தை உனக்கு அனுப்பியிருக்கும் சீதனம்தான் வாழ்த்துக்கள்!

கற்ற கல்வி காலத்துக்கும் உதவும் என்றார் போஸ்ட்மாஸ்டர். அதை ஆமோதிப்பது போல் வெளியே வானம் தூறிக்கொண்டிருந்தது.

FULL VERSION - FREE DOWNLOAD

No comments: